டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர் போன தூங்கா நகரமான மதுரை மாநகரம், இன்று நாட்டிலேயே அசுத்தமான நகரம் என பெயர் பெற்றுள்ளது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தலைகுவினை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சி, ஏற்கனவே ஊழல் காரணமாக நாறி வரும் நிலையில், தற்போது நகரமே அசுத்தமாக காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த அசுந்த நகரம் பட்டியலில்,  மதுரை மட்டுமில்லாமல், தலைநகர் சென்னை  மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, இது தமிழ்நாட்டுக்குக் குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.

#SwachhSurvekshanSurvey 2025 இல் இந்தியாவின் மிகவும் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து லூதியானா, சென்னை, ராஞ்சி மற்றும் பெங்களூரு உள்ளன.

ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் நகர்ப்புற தூய்மை முயற்சிகளில் விரிவடையும் இடைவெளிகளைக் காட்டுகிறது, பல பெருநகரங்கள் சிறிய, சிறப்பாக நிர்வகிக்கப்படும் நகரங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளன.

இந்திய நகரங்களில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை நிலையை வெளிப்படுத்தும் ஸ்வச் சர்வேக்ஷன் 2025 தரவரிசைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மாநகரமான மதுரை, இந்தியாவின் மிகவும் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்வச் சர்வேக்ஷன் 2025 அறிக்கையின்படி, மதுரை வெறும் 4,823 புள்ளிகளை மட்டுமே பெற்று, கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தில் கடும் போராட்டங்களைச் சந்திப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, 6,822 புள்ளிகளுடன் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கழிவுகளைப் பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அதன் நடைமுறைச் செயலாக்கத்தில் சறுக்கல்கள் இருப்பதை அறிக்கை குறிக்கிறது.

இந்தத் தரவரிசைகள், தூய்மை பாரத் இயக்கத்தின் பத்தாண்டுகள் நிறைவடைந்த பின்னரும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அடிப்படை சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையில் இன்னும் தடுமாறுவதையே காட்டுகின்றன.

ஸ்வச் சர்வேக்ஷன் 2024-25 ஆய்வில் மொத்தம் 4,589 நகரங்கள் சேர்க்கப்பட்டன. அவை முதல்முறையாகப் பின்வரும் ஐந்து மக்கள் தொகை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன:

மிகச் சிறிய நகரங்கள்: (20,000 க்கும் குறைவான மக்கள் தொகை) சிறிய நகரங்கள்: (20,000 – 50,000 மக்கள் தொகை)நடுத்தர நகரங்கள்: (50,000 – 3,00,000 மக்கள் தொகை)பெரிய நகரங்கள்: (3,00,000 – 10,00,000 மக்கள் தொகை)10 லட்சத்துக்கும் மேற்பட்ட நகரங்கள்: (10,00,000 க்கும் அதிகமான மக்கள் தொகை)

முதல் 10 அசுத்தமான நகரங்கள் பட்டியல் (10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை பிரிவு)

தரவரிசை – நகரம் – மாநிலம் மதிப்பெண்

1 மதுரை தமிழ்நாடு 4,823

2 லூதியானா பஞ்சாப் 5,272

3 சென்னை தமிழ்நாடு 6,822

4 ராஞ்சி ஜார்கண்ட் 6,835

5 பெங்களூருகர் நாடகா 6,842

6 தன்பாத் ஜார்கண்ட் 7,196

7 ஃபரிதாபாத் ஹரியானா 7,329

8 கிரேட்டர் மும்பை மகாராஷ்டிரா 7,419

9 ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் 7,488

10 டெல்லி டெல்லி 7,920

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில், தமிழ்நாட்டின் கலாச்சார நகரம் என்று கூறப்படும் மதுரை, இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது கவனம் பெற்றுள்ளது.

லூதியானா: பஞ்சாபின் முக்கியத் தொழில் நகரமான இது, விரைவான வளர்ச்சியால் குடிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.பெங்களூரு & மும்பை: இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு ஐந்தாவது இடத்திலும், நிதித் தலைநகரான கிரேட்டர் மும்பை எட்டாவது இடத்திலும் உள்ளன. திட்டமிடப்படாத விரிவாக்கம் மற்றும் அதிக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியதே இவற்றின் சவாலாக உள்ளது.

தூய்மையில் மின்னும் சூப்பர் ஸ்வச் லீக் வெற்றி நகரங்கள் 

அசுத்தமான நகரங்கள் ஒருபுறம் இருக்க, தூய்மை மற்றும் நகர்ப்புற சுகாதாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நகரங்களை சூப்பர் ஸ்வச் லீக் அங்கீகரித்துள்ளது.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை பிரிவில்: இந்தூர் மீண்டும் முதலிடம் பிடித்து, இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தனது சாதனையைத் தொடர்கிறது.

சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை வலுவான கழிவு மேலாண்மைக்காக இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன.

விஜயவாடாவும் இந்தப் பிரிவில் இடம்பிடித்து நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவில்:நொய்டா முதலிடத்திலும், திட்டமிடப்பட்ட நகரமான சண்டிகர் இரண்டாம் இடத்திலும் உள்ளன.கடந்த காலங்களில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்ட மைசூரு மீண்டும் தூய்மையான நகரங்களில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.உஜ்ஜைன், காந்திநகர் மற்றும் குண்டூர் ஆகிய நகரங்களும் உயர் தரத்தைப் பேணுவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்வச் சர்வேக்ஷன் 2025 தரவரிசைகள், ஒருபுறம் நிலையான கழிவு அமைப்புகளுக்காக முயற்சிக்கும் நகரங்களைப் பற்றியும், மறுபுறம் அடிப்படை குடிமை உள்கட்டமைப்பு சீர்குலைந்த நகரங்களைப் பற்றியும் மிகவும் வேறுபட்ட இரண்டு கதைகளைச் சொல்கின்றன.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி, மாநில அரசு கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.