மதுரை: தமிழகத்தில் 2026 மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆதார் சேர்க்கை மையங்களிலும் பயோமெட்ரிக் உள்பட அனைத்து தகவல்களை மாற்றம் செய்யக்கூடிய வசதி இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல்களை மாற்ற ஒருவரின் உடல் இருப்பு தேவைப்படலாம். ஆனால் பிற தகல்களை மாற்றுவதற்கான வசதி உள்ளூர் அளவில் இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

பரமக்குடியைச் சேர்ந்த வயதான பெண்மணி புஷ்பம் என்பவர், ஆதார் கார்டு விவகாரத்தால் ஓய்வூதியம் பெறுவதில் தனக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அதிக அளவில் ஆதார் சேவை மையங்கள் திறக்க உத்தரவிட வேண்டுமி என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு 74 வயதாகிறது. என் கணவர் இந்திய ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். பின்னர், கடந்த 23.5.2025-இல் இறந்தார். இதையடுத்து குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தேன்.
என் ஆதார் கார்டில் பெயர் மற்றும் பிறந்த தேதியில் தவறு இருப்பதாக கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த தவறுகளை சரி செய்யக்கோரி பரமக்குடி இ-சேவை மையத்துக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் தபால் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பெங்களூருவில் உள்ள ஆதார் மண்டல அலுவலகத்துக்கு விண்ணப்பித்தேன். அங்கும் ஆதார் கார்டில் உள்ள தவறுகள் சரி செய்யப்படவில்லை. எனவே எனது ஆதார் கார்டில் உள்ள தவறுகளை சரிசெய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருநதார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மனுதாரர் ஆதார் தகவல் திருத்தத்துக்கு உரிய ஆதாரங்களை வைத்துள்ளார். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆதார் கார்டில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள யாரை அணுக வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மதுரையில் உள்ள ஆதார் சேவை மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறினார்.
இதனையடுத்து மனுதாரரின் ஆதார் கார்டில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடிக்கவிருந்த நேரத்தில், பல வழக்கறிஞர்கள், தமிழகத்தில் தென் மாவட்டங்கள் அனைத்துக்கும் சேர்த்து மதுரையில் மட்டும்தான் ஆதார் சேவை மையம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதைடுத்து வாதாடிய அரசு வழக்கறிஞர், ஆதார் கார்டில் முகவரி மற்றும் தொலைபேசி எண் தொடர்பான விவரங்களை உள்ளூரிலேயே சரிசெய்யலாம் என்றவர், பெயர், பிறந்த தேதி மற்றும் பயோமெட்ரிக் தகவல்களில் ஏற்படும் மாற்றங்களை மதுரை ஆதார் சேவை மையத்தில் மட்டுமே சரி செய்ய முடியும். இதற்காக மதுரை ஆதார் சேவை மையத்தில் அதிகாலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, “இப்பிரச்சினை அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது. மத்திய அரசு ஆதார் முறையை அறிமுகப்படுத்தியது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதில் மாற்றம் கோரும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால், இங்கு மனுதாரர் கணவரை இழந்த மூத்த குடிமகள். பரமக்குடியில் வசிக்கிறார். அவரை மதுரைக்கு அலையவிட அவசியம் இல்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல்களை மாற்ற ஒருவரின் உடல் இருப்பு தேவைப்படலாம். ஆனால் பிற தகவல்களை மாற்றுவதற்கான வசதி உள்ளூர் அளவில் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் தற்போது “தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள 4056 ஆதார் சேர்க்கை மையங்களிலும் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றம் செய்யக்கூடிய வசதி இருக்க வேண்டும் என கூறினார்.
இதைடுத்து, ஆதார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 2026 மார்ச் மாதத்துக்குள் மேலும் 28 இடங்களில் ஆதார் சேவை மையம் திறக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து பேசிய நீதிபதி, இந்த திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆதார் சேவை மையம் இருக்க வேண்டும் என நீதிமன்றம் நினைக்கிறது. கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைய 6 மாதங்கள் உள்ளன. அதுவரை மனுதாரரை காத்திருக்குமாறு கூறமுடியாது.
எனவே மனுதாரர் மதுரை ஆதார் சேவை மையத்தை அணுக, அவருக்கு வேண்டிய மாற்றங்களை ஆதார் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு குடும்ப ஓய்வூதிய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.