சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி,  நவம்பர்  3ந்தேதி முதல் 6ந்தேதிவரை மூத்த குடிமக்களுக்கான  வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள்  வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன, மேலும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு ரேஷன் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
இந்த திட்டத்தின்கீழ்  70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடையவர்கள். அவர்களுக்கு தேவையான  அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படும். அதன்படி,  3ந்தேதி முதல் 6ந்தேதி வரை சென்னையில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படவுள்ளது

இது குறித்து சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,   முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

நவம்பர் 2025 மாதத்துக்கு நவ. 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.