சென்னை: பீகார் தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகாரிகள் குறித்து பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது அற்ப அரசியல் என்றும், தமிழர்களின் மீதான வன்மம், என பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும் வீடியோவை இணைத்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்” என மோடி பேசியுள்ளார்.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான பதிவில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் பிரதமர் மோடி பேசியது என்ன?
பீகார் சட்டமன்ற தேர்தல் பரப்புரை அனல் பறக்கிறது. அந்த வகையில் சப்ரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணியில் உள்ள கட்சிகள் பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார்.
அதன்படி, “தெலங்கானா மற்றும் கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர். தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களை திமுக மோசமாக நடத்துகிறது. ஆனால், இதை இங்குள்ள அவர்களின் கூட்டணி கட்சியான ஆர்ஜேடி கண்டுகொள்ளாமல் ஊமையாக இருக்கிறது. அவர்கள் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டனர்.
தங்கள் சொந்த மாநிலங்களில் பீகாரை அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை, ஆர்ஜேடி இப்போது இங்கு பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது. இது காங்கிரஸின் திட்டமிட்ட சதி. ஆர்ஜேடி அதிகபட்ச சேதத்தை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. ஆர்ஜேடிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான பிளவு எவ்வளவு ஆழமாகிவிட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.