சென்னை : கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்து முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் கட்டபொம்மன் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!”
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்டபொம்மன் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இன்று விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவு நாளையொட்டி, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , ஆங்கிலேயர்களின் வரி வசூலுக்கு எதிராக போரிட்டு, ஆங்கிலேய படைகளை விரட்டியடித்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!
ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் வரி வசூல் செய்ய முயன்றபோது, தென் மாவட்டங்களில் எழுந்த போர்குரல்களில் முதன்மையானது மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குரல்! இந்திய வரலாற்றில் “முதல் விடுதலைப் போராக” அறியப்படும் சிப்பாய் கலகம் உருவாகும் பல ஆண்டுகளுக்கு முன்பே, தென் தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலேய படைகளை விரட்டி அடித்தவர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இன்றைய தினத்தில், அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு கூறி உள்ளார்.