விழுப்புரம்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய  பிரச்சாரத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாக அய்யப்பன்  ஆதங்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கடிதத்தில் இதற்கு காரணம், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி என குற்றம் சாட்டி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கரூரில் திமுக நடத்திய முப்பெரும் விழா கூட்டத்தை விட, அதிக கூட்டத்தை கூட்ட தவெக நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கையே இந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிப்புக் காரணம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதே நேரம், விஜய் கூட்டத்தின்போது திடீரென காவல்துறை எடுத்த நடவடிக்கை, மின்சாரம் துண்டிப்பு போன்ற சம்பவங்களும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதேநேரம் அரசும் குறுகிய இடத்தில் தான் தங்களுக்கு இடம் தந்ததாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகிறார்கள் . மேலும் சதி என்றும் பரப்பி வருகிறார்கள்.

ஆனால், இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறது. திமுக அரசு மற்றும் செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்ட யுடியூபர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் பாஜக, தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 25க்கும் மேற்பட்டோர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என்று குற்றம்சாட்டி கடிதம் எழுதி வைத்து விட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு த.வெ.க கிளை செயலாளர் அய்யப்பன் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கரூர் சம்பவத்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான  விழுப்புரம், விற்பட்டு கிளை நிர்வாகியாக செயல்பட்ட அய்யப்பன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதம் போலீசாரின் கைகளில் கிடைத்துள்ளது.

அவரது கடிதத்தில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் துயரம் தாங்க முடியவில்லை. தவெக நிர்வாகியாக இருந்தும், இந்த பேரழிவில் எதையும் செய்ய முடியாமல் போனது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம். போலீசும் இதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அய்யப்பன் உடல் மற்றும் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது உண்மையிலேயே அந்த நிகழ்வின் காரணமாக நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் தவெக நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யப்பனின் தற்கொலை செய்தி வெளியாகியதும், அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் ஏக்கத்துடன் துயரம் அனுபவித்து வருகின்றனர். அய்யப்பன் மீது சமூக வலைதளங்களிலும் பல்வேறு இரங்கல் பதிவுகள் வெளிவந்துள்ளன. கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு அரசியல் மட்டத்திலும் பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக, தவெக, அதிமுக ஆகியவை ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் அய்யப்பன் தற்கொலை சம்பவம் அந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் எனக் கருதப்படுகிறது.

கரூர் பேரதிர்ச்சி சம்பவம் ஏற்கனவே தமிழ்நாட்டையே உலுக்கியது. அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இன்னும் சோகத்தில் இருக்கின்றன. அதற்கு மேலாக, இப்போது தவெக நிர்வாகி ஒருவரின் தற்கொலை கூடுதல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.