டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு ஏற்கனவே அக்னி உள்பட ஏராளமான ஏவுகணைகளை தயாரித்து, அதை வெற்றிகரமாக இயக்கியும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட   இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், அதன்  மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள  இந்த ஏவுகணை முதல் முறையாக, அதறகாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலிலிருந்து செப்டம்பர் 24ந்தேதி அன்று  ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது. இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளில் அக்னி – பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது.

இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி – பிரைம் ஏவுகணையை முதல்முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி சோதனை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில்,  “ரயிலில் அமைக்கப்பட்ட மொபைல் லாஞ்சர் அமைப்பிலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணையை முதல்முறையாக இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த ஏவுகணை 2,000 கி.மீ., வரையிலான தொலைவை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் லாஞ்சர் மூலம், எவ்வித தடையுமின்றி எந்த பகுதிக்கும் கொண்டு செல்ல முடியும். தெரிவுநிலை குறைந்த பகுதியிலும், குறுகிய நேரத்தில் எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையைப் படைத்த டிஆர்டிஓ மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனையானது, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.