சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில், பயணிகளின் தேவைக்கு குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, குடிநீர் பாட்டில்களை வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, அம்மா தண்ணீர் என்ற பெயரில் பேருந்து நிலையங்கள் உள்பட அரசு நிறுவனங்களில் ரூ.10க்கு ஒரு லிட்டம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிட்டியது. அதுபோல,  பெரும்பாலான தனியார் சொகுசு பேருந்துகளில் பயணிகளுக்கு இலவச குடிநீர் பாட்டில், முகம் துடைக்க வெட் நாப்கின் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு,  அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகம் சென்னை உள்பட நகர்ப்புறங்களில் இருந்து மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்கு தினசரி விரைவு பேருந்துகள், சொகுசு பேருந்துகள், படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகள், ஏசி பேருந்துகள் என   தினசரி 2060 சாதாரண மற்றும் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  மேலும் வார விடுமுறை இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், கூடுதலாக பேருந்துகளையும் இயக்கி வருகிறது.

இந்த நிலையில்,  இப்பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்கும் போது,  தங்களுக்கு  குடிநீா் தேவைப்பட்டால், பேருந்திலேயே குடிநீா் புட்டிகள் விற்பனை செய்யும் வகையில், விரைவு போக்குவரத்து கழகம்  நடவடிக்கை எடுத்துள்ளது.  அதன்படி,  அரசுப் பேருந்துகளில் ஒரு லிட்டா் குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு, இத்திட்டம் தொடா்பான விரிவான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

ஒப்பந்தப்புள்ளி தொடா்பான விவரங்களை விரைவு போக்குவரத்துக்கழக  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.