ஊட்டி: அதிமுக கட்சியை உடைக்க தி.மு.க. சதி செய்து வருவதாகவுங்ம,  அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்ஊழல்  நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக ஏற்கனவே, ஒபிஎஸ், சசிகலா, அமமுக என பலவாறாக உடைந்து சிதறி கிடக்கும்  நிலையில், அதை இனிமேல் திமுக  உடைக்க  என்ன இருக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணம் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் உள்பட பல பகுதிகளில் மக்களிடையே உரையாற்றுகிறார்.

இன்று காலை குன்னூர் பஸ் நிலையம் அருகே  திரண்டிருந்த அதிமுகவினர் மற்றும்  பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

”இன்றைக்கு குன்னூர் வருவதற்கு முன்பாகவே சகோதரரிடம் கேட்டேன் மழை வருமா வராதா எனக் கேட்டேன். அவர் சொன்னார் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்வதற்கு நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வருண பகவான் நமக்கு அருள் புரிவார். அதனால் வானம் மந்தமாக மேகமூட்டத்துடன் இருந்தாலும் உங்களை எல்லாம் சந்தித்து எழுச்சி உரையாற்றுகின்ற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு வருண பகவான் நமக்கு ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறார். திமுக ஆட்சியில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா?

இதே அதிமுக வந்த பொழுது நீலகிரி மாவட்ட மக்களை நேசித்தவர் ஜெயலலிதா. எப்போது பார்த்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டம் மக்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இருந்தார். மலைக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என அதிமுக அரசில் முதலமைச்சராக இருந்தபோது 400 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தேன். அந்த திட்டத்தின் மூலமாக இன்றைக்கும் இந்த பகுதி மக்களுக்கு ஏதாவது நோய்வாய் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னால் சிறப்பாக அறுவைச் சிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு தரமான மருத்துவமனையை கொடுத்த அரசு அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பெற்ற பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைத்து விட்டு போய்விட்டார். இது நியாயமா? திமுக நீலகிரி மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்கள் ஏதாவது ஒன்றை  நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா? ”எனக் கேள்வி எழுப்பினார்.

– தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பற்றியோ, விலைவாசி உயர்வை பற்றியோ கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறா

வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் நிலைமையை எடுத்து சொல்லி, வாகன நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுப்போம். சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது. ஆனால் தி.மு.க அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும். நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. கொள்ளையடிக்கும அரசாக இந்த தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்து விட்டது.

தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளிலும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1½ கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்கின்றனர். அப்படி கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி டாஸ்மாக் கடை மூலமாக வருமானம் வருகிறது. ஒரு மாதத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் வருகிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளது.  10 ரூபாய் வாங்குவது உண்மை தான் என அந்த துறையின் அமைச்சரே சொல்லிவிட்டார். இந்த பணம் எங்கு போகிறது. எந்த கணக்கில் இருக்கிறது. எத்தனை பாட்டில் திரும்ப பெற்றீர்கள். எவ்வளவு வசூல் வந்தது. இது எதற்கும் அவர்களிடம் கணக்கு இல்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தருவோம்.

அ.தி.மு.க அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க நிறுத்தி விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

அ.தி.மு.க அலுவலகம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறுகிறார். அவர் கனவு கண்டாரோ என்னவோ தெரியவில்லை. அ.தி.மு.க அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. வேண்டும் என்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்து பார்த்தீர்கள். ஆள் வைத்து அ.தி.மு.க கட்டிடத்தை நொறுக்கி பார்த்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க தி.மு.க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.

நீங்கள் அ.தி.மு.க.வை உடைக்க, அ.தி.மு.க.வை பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தீர்கள். எத்தனையோ பேரை கொம்பு சீவி பார்த்தீர்கள். ஆனால் அது அத்தனையையும் எங்களது தொண்டர்கள் முறியடித்தனர். அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதி.மு.கவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. அத்தனை தொண்டர்களும் அ.தி.மு.கவை தாங்கி பிடித்து கொண்டுள்ளனர்.

அ.தி.மு.கவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அவை அத்தனையும் தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும். இதே நேரத்தில் தி.மு.க.வுக்கு சோதனை வந்தபோது, தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்கள் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது அதனை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க 2 ஆக போனது. கருணாநிதி தடுமாறி கொண்டிருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அதனை காப்பாற்றி கொடுத்தது அ.தி.மு.க தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அ.தி.மு.கவுக்கு எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம். தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மக்களுக்கு உதவி செய்த வரலாறு எப்போதும் கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.