‘ரோபோ’ மனைவி நடன சர்ச்சை…
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய மரணம் ரோபோ சங்கருடையது.
மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சிகள், சினிமாக்கள் என பல தளங்களில் 25 ஆண்டுகளாக தனது அபரிமிதமான நகைச்சுவை நடிப்பாற்றலால் சிரிக்க வைத்தவர்.

இரு தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்ட அவருக்கு நேற்று சென்னையில் இறுதிச் சடங்கு.
அஞ்சலி செலுத்த வந்த பலரும் அவரவருக்கு உண்டான வகையில் அஞ்சலி செலுத்தினார்கள்.
கூல் சுரேஷ் என்பவர் குத்தாட்டம் போட்டார். சாவும் போது பணம் வராது என்று ஒரு முறை ரோபோ சங்கர் சொன்னதை மறுக்கும் வகையில் ஒருவர் பெரிய ரூபாய் நோட்டு மாலையுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
எல்லாவற்றையும் தாண்டி, ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தின் போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அஞ்சலி செலுத்தினார். இடுகாடு வரை சென்று அத்தனை கடமைகளையும் நிறைவேற்றினார்.

உடனே ரோபோ சங்கர் மனைவியை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர் சமூக வலைத்தளங்களில் உள்ள சில மூளை வீங்கி நெட்டிசன்கள்.
கணவன் இறந்த துக்கத்தை மறந்து விட்டு ஒரு பெண் இப்படி செய்யலாமா? நம் கலாச்சாரம் என்னாவது, பண்பாடு என்னாவது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்த நெட்டடிசன்கள் பல பேருக்கும் ஒரு விஷயம் புரியவில்லை.
கலைஞர்கள் இறக்கும்போது அவர்கள் நேசித்த கலையை அரங்கேற்றி அஞ்சலி செலுத்துவது என்பது பல இடங்களில் உள்ள பழங்கால நடைமுறை என்பதுதான் அது.
இங்கே ஒரு சம்பவத்தை நினைவு படுத்த வேண்டி உள்ளது.
2016ல் மிர்ணாளினி என்ற புகழ்பெற்ற நடனக் கலைஞர் இறந்துவிட்டார். அவர் மகள் மல்லிகா சாராபாய் பிரபலமான நடன கலைஞர் மற்றும் நடிகை.
வீட்டில் தனது தாயின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த போது, மல்லிகா சாராபாய் நீண்ட நேரம் நடனமாடி அஞ்சலி செலுத்தினார்.
தனது தாயின் சாவை பெருவாழ்வு வாழ்ந்த கல்யாண சாவாக மாற்றினார் மல்லிகா.
மல்லிகாவின் தாய் மிர்ணாளினி வேறு யாரும் அல்ல, இந்திய விண்வெளி திட்டங்களின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் மனைவி.