அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சார்லி கிர்க் மறைவையொட்டி அமெரிக்க கொடி ஐந்து நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தேடும்பணியில் அமெரிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கு உரிய நபரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் தருபவர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 88 லட்சம்) சன்மானமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் போல்ட்-ஆக்சன் துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் அந்த துப்பாக்கியில் இருந்து கைரேகை மற்றும் அந்த இடத்தில் இருந்த ஷூ தடம் உள்ளிட்டவைகளை கொண்டு டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

2021ம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து சித்தாந்த ரீதியாக உந்தப்பட்ட அமெரிக்க இளைஞர்கள் அரசியல் ரீதியிலான மோதலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

1970க்குப் பிறகு அரசியல் ரீதியிலான மோதல் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில் ஜனவரி 2021 முதல் தற்போது வரை 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர் பிழைத்த நிலையில் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் அவரை கொல்ல நடைபெற்ற மற்றொரு முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதன் உச்சகட்டமாக புதனன்று 3000க்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்த சார்லி கிர்க்கை குறிபார்த்து சுடப்பட்ட அந்த ஒற்றை குண்டு அவரது தொண்டைக்குழிக்குள் இறங்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கைப்பற்றப்பட்டுள்ள போல்ட்-ஆக்சன் துப்பாக்கி, தானியங்கி துப்பாக்கி போல் இல்லாமல், ஒவ்வொரு தோட்டாவையும் கைமுறையாக ஏற்ற வேண்டும்.

நீண்ட தூரத்தில் இருந்து மிகவும் துல்லியமாகக் குறி பார்த்து சுடுவதற்கு மிகவும் ஏற்றதாகக் கருதப்படும் இவ்வகை துப்பாக்கி பெரும்பாலும் அமெரிக்க வேட்டைக்காரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்களிடையே பிரபலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.