விழுப்புரம்: பாமகவின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து  தனது மகன் அன்புமணி ராமதாசை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் அரசியலுக்கு தகுதியற்றவர் அன்புமணி என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். இது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவை கைப்பற்ற தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற மோதல் தற்போது, மகனை கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாக மாறி உள்ளது. ஏற்கனவே ஆகஸ்டு  17ம் தேதி புபாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்  புதுச்சேரி அருகே  நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில்,  ஒழுங்கு நடவடிக்கை குழு  16 குற்றச்சாட்டுகளை  சுமத்தியது.

இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு  குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க  ராமதாஸ் தரப்பில்,  நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு  மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன்  (செப்டம்பர் 10ந்தி) முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.

இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல அன்புமணி செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (செப்டம்பர் 11) காலை செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,  “கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மருத்துவர் அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும்.

பா.ம.க தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி. 

இதனால் பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார்.
அன்புமணியுடன் பா.ம.க நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைத்தால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணியோடு இருந்தால் பலன் கிடைக்கும் என்று அவர்கள் அங்கு இருந்திருக்கலாம்.

தேவைப்பட்டால் அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி இந்த பா.ம.க. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.

மகனாகவே இருந்தாலும் இந்தக் கட்சியை உரிமைக் கொண்டாட உரிமையில்லை.

ஒரு பயிரிட்டால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் பயிரிடாமல் இல்லை. களையை நீக்கி விட்டோம். குந்தகம் விளைப்பிப்போரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம்,”

அன்புமணி நீக்கப்பட்டது கட்சிக்கு பின்னடைவு இல்லை என்று தெரிவித்த ராமதாஸ், தனது  இறுதி மூச்சுவரை கோலூன்றியாவது மக்களுக்காக பாடுபடுவேன். செயல் தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது என பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ராமதாஸ்  கூறினார்.

சிதறுகிறது மாம்பழம்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது! மருத்துவர் ராமதாஸ் விரக்தி…