சென்னை:  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என கூறி, அதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு  அறிவுறுத்தி இருந்தது. மேலும்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது, ஊழியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது நீதிமன்றங்கள் பல வழக்குகளில் கருத்து தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்  அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் ‘சஸ்பெண்ட்’ செய்யும் நடைமுறையை தவிர்ப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.  தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறைவெளியிட்ட அரசாணையில்,  அரசு ஊழியர்கள்தவறு செய்து அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்படுகிறது. சில வழக்குகளில் தவறு செய்பவர் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிககைக்காக அவர் தற்காலிக இடைநீக்கத்தில் (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.

இந்நிலையில் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கதமிழக அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி,

துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் உள்ளதா, மிகப்பெரிய தண்டனை, குறிப்பாக பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம், தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.

அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்க வேண்டும். விசாரணை, நடவடிக்கை ஆகியவற்றுக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்ஓய்வு பெறுவதைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் உரிய விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுத்து, இயற்கை நியதிக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

ஓய்வு பெறுவதற்கு முன்னரே அதாவது 3 மாதங்களுக்கு முன்னரே துறை ரீதியான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்க இயலாத பட்சத்தில், நடவடிக்கையில் நிர்வாகரீதியான தாமதத்தைக் கருத்தில்கொண்டு அந்த அரசு ஊழியரை ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும்.

ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன் ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், போர்க்கால அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம் செய்யலாம்.

முறைகேட்டில் ஈடுபட்ட அரசுஊழியர்கள் மீதான நடவடிக்கையை 3 மாதங்களுக்கு முன்முடிக்காமல் விசாரணை அதிகாரி தாமதப்படுத்தியிருப்பது தெரியவந்தால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை, குற்ற வழக்குகளுக்குப் பொருந்தாது.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இருந்தாலும், ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள், ஆனால், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்தபிறகே பணப்பலன்களை பெற முடியும் என தெரிவித்துள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்….