சென்னை: மாதவரம் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் போதைபொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் தாராளமாக நடைபெறுகிறது. மாநகராட்சி பூங்காக்கள், கால்வாய் யோரம், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள் என பல இடங்களிலும் போதைபொருள் நடமாட்டம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னையில், போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து, மாதவரம் அருள் நகர் மைதானம் (தோட்டக்கலைத்துறை பூங்கா) அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த ஐஸ்வர், இவரது தம்பி அபிஷேக், லிங்கேஸ்வரன், வசந்தராஜ், ரிக்கி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7.3 கிராம் மெத்தம்பெட்டமைன், 23 எம்டிஎம்ஏ மாத்திரைகள்,1 இருசக்கர வாகனம், 5 செல்போன்கள் மற்றும் 2 எடை இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.