துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி கே. சுரேந்தர் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தெலுங்கானாவை தளமாகக் கொண்ட டெல்லி MSW சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த இரண்டு மண்டலங்களிலும் சுகாதாரப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் தொழிலாளர்களின் மாத ஊதியம் கணிசமாகக் குறையும் என்ற அச்சத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து விளக்கத்தை பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி ஆணையர், உண்மையில், தனியார் முதலாளியிடமிருந்து தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன, அதனால் துப்புரவுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது புதிதல்ல.
இந்த மண்டலங்களில் மாநகராட்சியின் கீழ் பணி புரிந்த துப்புரவுப் பணியாளர்கள் தனியார் முதலாளிகளால் பணியமர்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான பிரமாண பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்பதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வியே எழவில்லை என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், தற்காலிகத் தொழிலாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியம் அல்லது அதற்கு மேல் பெறுவதை உறுதிசெய்ய தனியார் முதலாளியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.