சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த ரயில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதுடன், 10 பெட்டிகளுடன் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹைட்ரஜ்ன் ரயிலின் சிறப்பம்சங்கள்:
சுஹைட்ரஜன் மூலம் இயங்குவதால், இந்த ரயிலில் இருந்து எந்தவிதமான புகையும் வெளியேறாது. இது கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும். மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.
இந்த ரயில், சுமார் ரூ.118 கோடி மதிப்பீட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 84 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த ரயில் என்ஜின், 1,200 குதிரைத் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.
வசதிகள்:
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நவீன கழிப்பறை வசதிகள் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
ஹைட்ரஜன் ரயில், வடக்கு ரயில்வேயிடம் விரைவில் ஒப்படைக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஹரியானா மாநிலத்தின் சோனிபேட் – ஜிந்த் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக, 50 முதல் 80 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்திய ரயில்வேயின் இந்த புதிய முயற்சி, எதிர்காலத்தில் பசுமையான மற்றும் நீடித்த ரயில் போக்குவரத்துக்கு வழிவகுக்கும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.