சென்னை: வாக்காளர் மோசடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்ற நலையில், அதை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் போது “வாக்காளர் மோசடி” குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக நாடாளுமன்றத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பேரணியாகச் சென்ற இந்தியத் தொகுதித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.
நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. ‘வாக்கு திருட்டு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியில் கலந்துகொண்டனர். 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம், மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியே சாலையில் வந்த இநத் பேரணியை டெல்லி காவல்துறை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் பேரணிக்கு இதுவரை எவ்வித அனுமதி கோரவில்லை என்றுடெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய சமாஜவாதி எம்பி ராம்கோபால் யாதவ், ”டெல்லியின் தெருக்களில் நடக்க எம்.பி.க்களுக்கு அனுமதி தேவையில்லை. எம்.பி.க்கள் சாலைகளில் பேரணி செல்வதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக இருந்தால், இந்த அமைப்பே பயனற்றது.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 7 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மக்களவைத் தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இந்த குற்றச் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ராகுல் காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஆகஸ்டு 11ந்தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். மேலும், . இந்த பேரணி காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருத்நது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ”வாக்குகள் திருடப்படுவது என்பது ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், காவல்துறையின் அனுமதி பெறாமல் சென்ற பேரணியை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.