வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார்  என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு, 20-வது தவணைத் தொகையாக, தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றியவர், சமீபத்தில் தமிழ்நாடு வருகை தந்து, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் விழா மற்றும் அங்கிருந்த பிரகதீஸ்வரர் கோவில் வழிபாடு செய்யடி வாரணாசியில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்த அபிசேகம் செய்ய கொடுத்திருந்தார். மேலும் அங்கு  பூஜை செய்து வழிப்பட்டார். இதை வாரணாசி நிகழ்ச்சியில் பிரதமர்  சிலாகித்து பேசினார்.  கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்ததாகப் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, தான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். இந்திய மக்களின் ஒற்றுமையால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நமது மகள்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்குவதாகத் தான் சபதம் செய்திருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதை மகாதேவரின் ஆசீர்வாதத்துடன் நிறைவேற்றியதாகத் தெரிவித்தார். மேலும்  சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை மகாதேவரின் பாதங்களில் அர்ப்பணிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இந்தியா அழித்ததைக் காங்கிரஸாலும், அவர்களின் நண்பர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரையும், நமது வீரர்களின் வலிமை பற்றியும் காங்கிரஸால் எப்படி கேள்வி எழுப்ப முடிகிறது என்று வேதனை தெரிவித்தார்.