திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்கிற எனது எழுச்சிப் பயணம் உங்களின் பேராதரவோடு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்கும் மிக முக்கிய பொறுப்பினையும், அதற்குண்டான நேர்மையுடனும் அவர்களை வழிநடத்தும் ஒரு முன்கள வீரனாக நான் இருப்பதில் மிக்க பெருமையடைகிறேன். தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ந்தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ந்தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன்.
நான் சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பட்டு நெசவாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், இளைஞர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள், கலைக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே, மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர் என்றும் தெரிவித்தார்.
, ‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்கும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் சோதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்தேன். நேற்று அந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று பழைய நடைமுறைப்படியே கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளார். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். சுற்றுப்பயணத்தின்போது விவசாயிகள் வைத்த கோரிக்கையை நான் அனைத்து இடங்களிலும் பேசினேன். ஆனால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, பிரதமரிடம் மனு அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான். அதிமுக கூட்டணியில் சசிகலா வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன என்கிற யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தலைமையிடம்தான் கேட்க வேண்டும். வட மாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு குறித்து பேசியபோது தென் மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதெல்லாம் முடிந்து போன ஒன்று, இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம். இன்று இந்தியா முழுவதும் மத்திய அரசு ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. அதனடிப்படையில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள்.
இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றவர் எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைமையில் த.வெ.க. கூட்டணியா? என்ற கேள்விக்கும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.