சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் . அதற்கான பிரச்சார அட்டவணையை மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது.

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கட்சிப் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்கள் உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளதாக திமுக கூறுகிறது.
அதுபோல, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தொகுதிவாரியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து தவெக தலைவர் விஜயும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ராஜ்யசபா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வைகோ, மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கழகத்தினர், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
2025 ஆகஸ்டு 9, இடம் – தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்
2025 ஆகஸ்டு 10, இடம்: கடையநல்லூர், பொருள்: மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்
2025 ஆகஸ்டு 11, இடம்: கம்பம், பொருள்: முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும்
2025 ஆகஸ்டு 12, இடம்: திண்டுக்கல், பொருள்: விவசாயிகள், மீனவர்கள் துயரம்
2025 ஆகஸ்டு 13, இடம்: கும்பகோணம், பொருள்: மேகதாதுவும், மீத்தேனும்
2025 ஆகஸ்டு 14, இடம்: நெய்வேலி, பொருள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
2025 ஆகஸ்டு 18, இடம்: திருப்பூர், பொருள்: இந்தி ஏகாதிபத்தியம்
2025 ஆகஸ்டு 19, இடம்: திருவான்மியூர், பொருள்: சமூக நீதியும்; திராவிட இயக்கமும்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.