சென்னை: அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி செய்திகளிடம் விளக்கம் அளித்தார்.
முதல்வர் நலமாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தலைசுற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. உச்சபட்சமாக இன்று, சென்னை தேனாம்பேட்டை அப்போலோவில் முக்கிய பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் கிரிம்ஸ் ரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கபாலை சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி, “முதல்வர் நலமாக இருக்கிறார். இன்று காலை சில பரிசோதனைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். நேற்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். 3 நாள்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். முதல்வர் விரைவில் குணமடைந்து வந்துவிடுவார்” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி உள்பட பலரும் முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.