சென்னை: அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த இஸ்லாமிய கட்சிகள் அங்கிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்து வருகின்றன. இதற்கிடையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி.யான அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், அதிமுக தலைமைக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் எம்.பி.யான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதும், அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அன்வர்ராஜா, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் மீண்டும் அதிமுகவிலேயே பயணித்தார். தற்போது மீண்டும், அன்வர்ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ராமநாதபுரம் முன்னாள் எம் பி அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா?