சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு, ரூ.2300 கோடிகளை ஒதுக்குவதாக கூறியது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இதற்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை கூவம் சத்தப்படுத்தப்படவும் இல்லை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் இல்லை என்பது வேதனைக்குரியது.

சென்னை நகரத்தின் ஊடே ஆங்காங்கே கால்வாய்கள், ஆறுகள் செல்வதை நாம் காணலாம். இவை ஒரு காலத்தில் நீர் போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்த நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கத்தால், தற்போது கழிவுநீர் செல்லும் கூவமாக மாறி உள்ளது. மேலும் சுமார் குறைந்தது 40 அடி முதல் 100 வரையிலான அகலம் கொண்ட இந்த காவல்வாய்கள், பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 10அடி முதல் 20 அடி கால்வாயாக காட்சியளிக்கிறது. மேலும், மழை வெள்ளத்தின்போது, இந்த கால்வாய்களும் நீரால் நிரம்பி தெருக்களில் ஓடும் நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு முறை தமிழ்நாட்டில், ஆட்சியாளர்கள் மாறும்போதும், சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மிளிரும் என்றும், எழில்மிகு சென்னையாக ஜொலிக்கும் என்று கூறி வருவது வாடிக்கையாகவே உள்ளது.

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது,2015 – 16ம் நிதியாண்டில் 1,479 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில், கூவம் ஆற்றை துார்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு, 129.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.
மேலும், ஆற்றங்கரையோரம் வசித்த மக்களை மறுகுடியமர்த்துவதற்காக 290.13 கோடி ரூபாய்; கழிவுநீர் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக 129.83 கோடி ரூபாய்; சுற்றுச்சுவர், வேலி அமைப்பதற்காக 122.99 கோடி ரூபாய்; மரம் நடுதல் மற்றும் அழகு படுத்துதல் பணிக்காக 20.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. அதன்படி, 1,479 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டும், கூவம் ஆறு சென்னையின் பிரமாண்டமான கழிவுநீர் வாய்க்காலாகவே தொடர்கிறது.
அடுத்து 2021ல் வந்த திமுக ஆட்சியும், அரசு கடந்த 2021ம் ஆண்டு, ரூ.2300 கோடிகளை ஒதுக்கியது. அதுவும் நீரில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போனது. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை வளர்ச்சிக்காக பல நூறு கோடிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டு மின்றி சென்னை மாநகராட்சி தனது பங்குக்கும் பல நூறு கோடிகளை ஒதுக்கி வருகிறது. ஆனால், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்கள் எப்போதும் போல மாசுபட்டே காணப்படுகிறது.
எனினும், மாசுபட்டிருக்கும் கூவம் ஆற்றில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இதனால், சென்னைவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கூவம், அடையாறு ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அவற்றுடன், பொதுப்பணி, நீர்வளம், சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக மேம்பாட்டு இயக்கம்,சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,சென்னை நதிகள் சீரமைப்புஅறகட்டளை ஆகிய அரசு துறைகளும், கூவம் ஆறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், தொடர்ச்சியாக நடக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால், கூவம் ஆற்றின் இயல்புநிலையை மீட்பது, எட்டாக்கனியாகவே உள்ளது.
சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என ஆட்சியாளர்களால் கூறப்பட்ட, சென்னை மாநகரம் நாளுக்கு நாள் மோசமடைந்து, வசிக்க தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது.
சென்னை நகர கட்டமைப்பிற்காக, கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கூவம் கரையோரத்தில் தங்குவதற்கு, ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டனர். காலப்போக்கில், சென்னையை நோக்கி படையெடுப்போரின் வாழ்விடமாக கூவம் கரை மாறிப்போனது. கூவம் மறுசீரமைப்பு பணியில், 13,200 வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், பெரிய நிறுவனங்களில் கட்டுமானம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அகற்றுவதற்கு பதிலாக, இந்நிலம் அந்நிறுவனங்களுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல்படி தாரைவார்க்கப்பட்டு உள்ளது.
சென்னையில், பெரிய நிறுவனங்கள் முதல் குடியிருப்புகள் வரை, குடிநீர் வாரியத்திற்கு வரி செலுத்த தயங்கி, மழைநீர் வடிகால்களில் நேரடியாக கழிவுநீர் இணைப்பை விடுகின்றனர். இந்த கழிவுநீர் இணைப்பை, கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, முழுமையாக துண்டிக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பை கொட்டுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆனால், அதை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதே உண்மை நிலை….
ஒவ்வொரு முறை தமிழ்நாட்டில், ஆட்சி மாறும்போது, ஆட்சியாளர்கள் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மிளிரும் , எழில்மிகு சென்னையாக ஜொலிக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், மக்களை ஏமாற்றும் வகையில் அதிக அளவில் மக்கள் வரும் மெரினா போன்ற சுற்றுலா பகுதிகளை மட்டுமே மிளிர வைத்துவிட்டு, மீது 75 சதவிகித பகுதிகளில் ஆர்வம் காட்டாத நிலையே தொடர்கிறது.