சென்னை; நாளை பவுர்ணமியையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாசலேஸ்வரர் மலையை கிரிவலம் வர பல லட்சம் பேர் குவிவார்கள் என்பதால்,  கிரிவலம் நேரம் மற்றும் :மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், அவசர உதவிகள்  குறித்த  விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

நாளை (ஜூலை 10ம் தேதி) பூராடம் நட்சத்திரத்துடன் கிரிவலம் வருகிறது. அதனால் பூராடம் நட்சத்திரத்தை கொண்டவர்கள் நாளை கிரிவலம் சென்று  சிவ பெருமானை வழிபடுவது சிறந்தது என ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐம்பூதங்களில் அக்னிஸ்தலமாக திகழும்,  திருவண்ணாமலை, சிவ ஸ்தலங்களில் பிரச்சித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் மலையின் உருவில் அண்ணாமலை யாராக  எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம்  அன்று,  பிரசித்தி பெற்ற அண்ணாமலை குடியிருக்கும் மலையை வலம் வந்து வழிபடுவது, சிவனை வலம் வந்து வழிபடுவதற்கு சமமானதாக கருதப்படுகிறது. கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டால் சிவ பெருமானின் பரிபூரண அருளும், பெரும் புண்ணியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை. அதாவது, பவுர்ணமி நிலவின் ஒளி அண்ணாமலை மீது படும்போது, அது ஆன்மீக சக்தியை அதிகரிக்கிறது என்றும், அந்த சமயத்தில் கிரிவலம் வந்தால், சிவனின் அருளை முழுமையாகப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக, பவுர்ணமி அன்று சித்தர்களும், யோகிகளும் அருவ வடிவில் மலையை வலம் வருவதாக நம்புகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை மாத பவுர்ணமி  நாளை (ஜூலை 10ம் தேதி) வியாழக்கிழமை வருகிறது.  நாளை  அதிகாலை 02.36 மணிக்கு துவங்கி, ஜூலை 11ம் தேதி அதிகாலை 03.11 வரை பவுர்ணமி திதி உள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஜூலை 10ம் தேதியன்று காலை 11.35 மணிக்கு கிரிவலத்தை துவங்கி, ஜூலை 11ம் தேதி பகல் 01.30 மணிக்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர்கள் கோவிலுக்கு எந்த வழியாக வரவேண்டும் என்பது குறித்தும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (10ந்தேதி) கோவிலுக்கு வரும் மூத்த குடிமக்கள் (60வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் 6வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் வடக்கு வாசல் (அம்மணி அம்மன் கோபுரம்) வழியாக  காலை 10 மணி முதல் 12மணி வரையும், பிற்பகல் 3மணி முதல் 5மணி வரையும் அனுமதிக்கப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டு உள்ளது,.

அத்துடன் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உதவியுடன் பேகோபுரம் வழியாக காலை 10 மணி முதல் பகல் 12மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6 மணி வரையிலும் கோவிலுக்குள் செல்லாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பேரிடர் கால உதவிக்கு  9487555441, மருத்துவ உதவிக்கு 8072619454,  9791556353 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையாது பாதை சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்டது.  இந்த பாதையில் அஷ்ட லிங்கங்கள் (இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம்) மற்றும் பல்வேறு தீர்த்தங்கள், சன்னதிகள் அமைந்துள்ளன. பக்தர்கள் இந்த லிங்கங்களை வழிபட்டு, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.

கிரிவலம் வருவதன் மூலம் பாவங்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும், நோய் நொடிகள் அகலும், மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனதார அண்ணாமலையாரை நினைத்து இந்த கிரிவலத்தைச் செய்வதால், நினைத்த காரியங்கள் ஈடேறும். பௌர்ணமி கிரிவலம், திருவண்ணாமலையின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நேரம் குறித்த தகவல்களை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு கிழமை, திதி, மாதம், நட்சத்திரம், நேரம் ஆகியவற்றில் கிரிவலம் செல்வதற்கு ஒவ்வொரு பலன்கள் உள்ளதாக சொல்லப் படுகிறது. அப்படி வியாழக்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சகல விதமான திருமணத் தோஷங்கள் நீங்கும். ஞானம், செல்வ செழிப்பு கிடைக்கும். குரு பகவானின் அருள் கிடைக்கும். நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெருகும். சகல விதமான தோஷங்களும் விலகும்.

நாளை (ஜூலை 10ம் தேதி) பூராடம் நட்சத்திரத்துடன் கிரிவலம் வருகிறது. பூராடம் நட்சத்திரத்தின் தெய்வம் வருண பகவான். அதனால் இந்த நட்சத்திரம் வரும் நாளில், குறிப்பிட்ட நட்சத்திரம் பெற்றவர்கள்,   சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.