கடலூர்: செம்மங்குப்பம் பகுதியில், , பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து நடைபெற்ற பகுதியில் புதிய கேட் கீப்பராக ‘தமிழர்’ நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே  பணியில் இருந்த வடமாநில நபர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கடலூர்  செம்மங்குப்பம் பகுதியில்  தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது, மயிலாடுதுறை நோக்கிச் சென்ற ரயில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், 3  மாணவ மாணவிகள்  உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் ரயில்வே நிர்வாகம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ரயில் பாதையின் கேட்டை மூடாததே காரணம் என கூறி, அப்பகுதி மக்கள்   அங்கு பணியில் இருந்த வடமாநில கேட் கீப்பரை கடுமையாக தாக்கினர்.  இதுதொடர்பான முன்னுக்கு முன் முரணான தகவல்கள் வெளியாகி உள்ளது.  வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.   இதற்கிடையில் கேட் கீப்பரின் அலட்சியமே விபத்து காரணம் என கூறி அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதன்படி,  செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.