திருப்புவனம்
திருப்புவனம் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன.

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது கொலை செய்யப்பட்ட காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பணமோசடி புகார்களின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சுமார் 15 ஆண்டுகளுக்குமுன் நிகிதா மற்றும் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம், பல லட்ச ரூபாயை சுருட்டியவர்கள் என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதைப்போல் அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருமங்கலத்தை சேர்ந்த நிகிதாவின் உறவினர் செய்தியாளர்களிடம்,
”மோசடியில் ஈடுபட்ட நிகிதா என் உறவினர் ஆவார். இரண்டு நாளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு ரூ.9 லட்சத்தை அவர் மூலம் அவருடைய குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதேபோல் என் உறவினர் வினோத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்காக ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம். பணத்தை திரும்ப கேட்டபோது ஏமாற்றிவிட்டு, எங்களை மிரட்டி அனுப்பிவிட்டனர்.
நிகிதா என்னிடம் 2006-ம் ஆண்டு பி.எட் மாணவியாக பயின்றவர். முக்கிய பிரமுகர்கள், அவருடைய உதவியாளர்களை, தங்களுக்கு தெரியும் எனக்கூறி பலரையும் இந்த குடும்பத்தினர் ஏமாற்றி உள்ளனர். கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தற்போது திருப்புவனத்தில் நகை திருட்டு போனதாக கூறி இருப்பதுகூட பொய்யான தகவலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இந்த மோசடியில் தொடர்புடைய நிகிதாவின் தந்தை ஜெயப்பெருமாள் துணை கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.”
என்று கூறியுள்ளார்.
தாயார் சிவகாமி அம்மாளுடன் தற்போது திருமங்கலத்தில் உள்ள வீட்டில் வசித்து, திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வரும் நிகிதா 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், நிகிதாவுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.