சென்னை: ஓரணியில் தமிழ்நாடு  திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது வீடு அமைந்துள்ள பகுதியான அழ்வார் பேட்டையில்,  வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மக்களை கவரும் வகையில், தி.மு.க., சார்பில்  ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார யுக்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.   அதன்படி,  ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில், தமிழக முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தவும், தி.மு.க., அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறவும், வீடு வீடாக சென்று கட்சி  உறுப்பினர்களை சேர்க்கவும்   திமுகவினருக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த திட்டத்தை ஜுலை 1ந்தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்த நிலையில், திமுகவினர்,  உறுப்பினர்  சேர்க்கையில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் இன்று தான் வசிக்கும் பகுதியான  சென்னை ஆழ்வார்பேட்டையில்   ’ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து, வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.  இந்த நிகழ்ச்சியின்போது,  முதல்வருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  மா. சுப்பிரமணியனும்  இடம்பெற்றிருந்தார்.

இதனிடையே, தமிழக அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ’ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார இயக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையையும் நடத்தி வருகின்றனர்.