சென்னை: சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2021 ‘சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களை நிரத்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்து, இதுவரை நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்’ என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2021 தேர்தலின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுவரை நடக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தோம். போராட்டங்கள் நடத்தினோம். கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு இதுவரை லட்சக்கணக்கான மனுக்கள் அனுப்பினோம்.
ஆனால், எங்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்த பயனும் இல்லை. 2023ல் செப்டம்பர் மாதத்தில் தொடர் போராட்டம் நடத்தினோம். இதை முடிவுக்கு கொண்டுவர ரூ.2500 சம்பள உயர்வு, ரூ.10 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பல மாதம் இழுபறிக்கு பின் சம்பள உயர்வு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவ காப்பீடு நிலை என்ன ஆனது என இதுவரை தெரியவில்லை.
அதனால் முதல்வர் ஸ்டாலின் ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்குள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி 12 ஆயிரம் ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி விரைவில் நீதிகேட்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். தங்களது கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…