ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR செயற்கை கோள், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சில நாட்களில் ஏவப்பட உள்ளது. இது பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை செ.மீ-நிலை துல்லியத்துடன் கண்காணிக்கும் தன்மை கொண்டது.

பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக ‘நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்’ (நிசார்) என்ற செயற்கைக்கோளை அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, அமெரிக்க மு ன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்தபோது ஒப்பந்தம் கையெழுத்தாகின.
இதையடுத்து செயற்கை கோள் உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது. . இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்ய பணிக்கப்பட்டு மீண்டும், கலிபோர்னியா அனுப்பி வைக்கப்பட்டு, பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு, மிண்டும் இந்தியா வந்தடைந்தது.
இந்த செயற்கை கோளை இந்தியா ஆய்வு செய்து வருகிறது. இந்த செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயற்கை கோளை, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. அதற்கான தேதி குறிப்பிபட்டுள்ளது. அதன்படி 2025 ஜூலை மாதம் 14-ந் தேதி நிஸார் செயற்கைகோள்விண்ணில் ஏவ இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சுமார் 2 ஆயிரத்து 800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிக்க சுமார் ரூ.1,805 கோடி செலவிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக, பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும். அத்துடன், நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
அத்துடன் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை நிலையாக நிர்வகிக்க உதவி செய்கிறது. தொலைதூர உணர்தலுக்காகவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.
இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதியிலுள்ள ‘கிரையோஸ்பியர்’ என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பனி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 4 முதல் 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் கூறினர்.