டெல்லி: குஜராத் மாநிலம் அகமபாத் விமான நிலையம் அருகே நடைபெற்ற 241பேரை கொண்ட ஏர்இந்தியா விமான விபத்து நடைபெற்ற இடங்கள் பார்வையிட பிரதமர் மோடி இன்று அகமதாபாத் செல்கிறார். ஏற்கனவே நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிவில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்ட நிலையில், இன்று அகமதாபாத் விமான விபத்து நடைபெற்ற இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்கிறார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஜூன் 12ந்தேதி பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர். இவர்களில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டத்தில் பெரும்பாலானவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக 11ஏ இருக்கையில் பயணித்த ரமேஷ் என்கிற ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துயரம் ஒருபுறம் இருக்க, விபத்துக்குள்ளான விமானம் விமான நிலையம் அருகே உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது விழுந்துதான் வெடித்து சிதறியது. இதனால் விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரி உயிரிழந்துள்ளதாகவும், 5 பேரை காணவில்லை எனவும் அகில இந்திட மருத்துவ சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, உடனே தேவையான நடவடிக்கைகைளை எடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட சிலரை அகமதாபாத் அனுப்பிய நிலையில், விபத்து குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.
அதுபோல ஜனாதிபதி திரவுபதி முர்முவும், ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்; மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்; விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாட்டையே பெருந்துயரத்திற்கு ஆளாக்கியுள்ள விமான விபத்து நடைபெற்ற அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்யும் அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவார் தகவல்கல் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகமதாபாத் செல்லும் பிரதமர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுவதோடு, மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற்றும் வருபவர்களை நேரில் சந்திக்கிறார்,மேலும், விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கும் அஞ்சலி செலுத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மத்திய மற்றும் மாநிலத் தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் மின் ராம் நாயக், சி.ஆர். பாட்டீல் ஆகியோர் பிரதமருடன் வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.