மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அதேவேளையில், மத்திய பிரதேச மாநில இந்தூரில் இருந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியர் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது.

சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷி ஆகியோரது திருமணம் மே 11ம் தேதி நடைபெற்றதையடுத்து அவர்கள் இருவரும் மே 20ம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்றனர்.
மே 21ம் தேதி ஷில்லாங்கில் உள்ள பாலாஜி விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் விடுதியை காலி செய்வதாகக் கூறிவிட்டு மே 22ம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சிரபுஞ்சி சென்றுள்ளனர்.
மே 23ம் தேதி மௌலக்கியத் கிராமத்தை அடைந்த தம்பதியினர், நோங்ரியாட்டில் உள்ள ஷிபாரா ஹோம்ஸ்டேயில் தங்கிய நிலையில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவந்துள்ளனர்.
இதனிடையே ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா (சிரபுஞ்சி) செல்லும் சாலையில் ஒரு ஓட்டலுக்கு அருகில் ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக மே 24ம் தேதி உள்ளூர் வாசிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோரை தேடும் பணியை தீவிரப்படுத்திய மேகாலயா காவல்துறையினர் ஜூன் 2ம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடலை சடலமாக மீட்டனர், ஆனால் சோனம் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள நந்தகஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் சரணடைந்ததாகவும் அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜா ரகுவன்ஷி மரணம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரகுவன்ஷியை கொலை செய்யச் சொல்லி சோனம் தங்களுக்கு பணம் கொடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இதையடுத்து சோனம் மேகாலயாவில் இருந்து வேறு எங்காவது சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரை உடனே கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் ராஜா ரகுவன்ஷியின் உறவினர்கள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதுதொடர்பாக விரைவான விசாரணை மேற்கொள்ள மேகாலயா முதல்வரும் அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கொன்றதாக மனைவி சரணடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.