சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும்  பரவி வரும் நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் கொரோனா வார்டை தயாராக வைத்திருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில்,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 தமிழ்நாட்டில் வீரியம் குறைந்த கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அண்மையில் சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மரணத்துக்கு காரணம், அவருக்கு இருந்த இணைநோய்கள் என  அரசு கூறி வருகிறது. இருந்தாலும் அவருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கி உள்ளதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும், ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர், மருந்து மாத்திரைகள் என அனைத்தையும் தயாராக வைத்திருக்கும் படி மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.   அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பெரியவர்களுக்கு 30, சிறியவர்களுக்கு 20 என மொத்தம் 50 படுக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்களும் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன.

மேலும், காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொ ரோனா ‌ தொற்று பாதிப்பு ஏதும் உள்ளதா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.