சென்னை: குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இதுவரை பெறாதவர்கள்,  விடுபட்டவர்கள் இன்று  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு  வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்  அரசு இலவசமாக, அதாவது உரிமைத் தொகையாக 1000  ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அவரது தந்தையும்,   தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்த திட்டத்துக்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிட்டி உள்ளது. எந்தவொரு பணியும் செய்யாமல் மாதம் ரூ.1000 கிடைப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 1.16 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை மகளிர் உரிமை பெறாதவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து  விடுபட்டவர்களும் தங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையேற்று, அவர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் வசதிகாக தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்பபதிவு முகாம்கள் இன்று நடைபெற உள்ளன. இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை புதிதாக சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.

முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.