சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததால் அவர் உயிரிழந்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா குறித்து  மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும்  511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில், மாஸ்க் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும்  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதற்கிடையில்,  கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த,,  தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவிட் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியதாகவும், அதில் வீரியம் இல்லாத கொரோனா தொற்றுதான் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருந்தாலும், பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகளைக் கடைப்பிடிப்பது நல்லது எனத் தெரிவித்த அவர், பெரிய அளவில் பாதிப்புகளுடன் இருப்பவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது நல்லது எனத் தெரிவித்தார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அறிவுறுத்தல்தான் என்றவர்,  2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.

கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது. * மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு என்றும் கூறினார்.

இதையடுத்து  தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,   உயிரிழந்த நபர்  ஏற்கனவே நீரிழிவு நோயாலும், நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால்,  அவர் உயிரிழந்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மோகன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, மோகன்  கடந்த இரு  நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…