சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் 3500 ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த பிஎஸ்எஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர். இந்த நிகழ்வில் மொத்தம் 2 6+2 என மொத்தம் 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அரசு பாகிஸ்தான்மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதுடன், இந்தியப் பெண்களின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் நூற்றுக்கும் அதிகமான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் அழித்து ஒழித்தது. மேலும் அதிரடி தாக்குதலையும் நடத்தி பாகிஸ்தானை நிலைகுலைய செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டறிந்து அவர்கள்மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பஹல்காம் தாக்குதல் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் ரகசியங்களையும், முக்கிய தகவல்களையும் பகிர்ந்ததாக மொதிராம் எனும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்தது. இந்த சம்பவம் ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த மோதி ராம் ஜாட் என்பவரோடு, சண்டிகரைச் சேர்ந்த முக்கிய தொலைக்காட்சியில் பணியாற்றும் பத்திரிகையாளர் எனக் கூறி பெண் ஒருவர் பழகியுள்ளார். ஆரம்பத்தில் சிறு, சிறு தகவல்களை மட்டும் கோரிய அப்பெண், அடுத்தடுத்த நாட்களில் மோதி ராமுடன் மிகவும் நெருக்கமாகியுள்ளார். தொலைப்பேசி உரையாடல்களும், வீடியோ கால்களும் அவர்களின் தொடர்பை மேலும் வலுவாக்கிய நிலையில், ராணுவத்தின் பல ரகசியத் தகவல்களையும் அப்பெண்ணிடம் மோதிராம் பகிரத் தொடங்கியுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட பெண்ணின் நண்பர் என அடையாளம் காட்டப்பட்ட நபர் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி என்பதை அறியாத மோதிராம் அடுத்தடுத்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். காலப்போக்கில் குறிப்பிட்ட பெண் மற்றொரு நபரை தன் நண்பர் என அறிமுகப்படுத்த, இந்திய ராணுவத்தின் முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் அவருக்கும் மோதிராம் பகிர்ந்திருக்கிறார். அதிலும் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இடமான பஹல்காமில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், ராணுவத் துருப்புகளின் நடமாட்டங்கள் மற்றும் உளவுத்துறையின் அறிக்கைகளையும் மோதிராம் பகிர்ந்திருப்பதைத் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் உறுதி செய்திருக்கிறது.

மேலும் மோதிராம் பகிர்ந்த தகவல்களுக்காக மாதம் தோறும் மூவாயிரத்து ஐநூறு ரூபாயும், 12 ஆயிரம் ரூபாய் போனஸாகவும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
மோதிராமின் தொலைப்பேசியைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய அனைத்து விவரங்களும் அழிக்கப்படாமல் அப்படியே இருந்திருக்கிறது. பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அங்கிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்குப் பகிர்ந்திருக்கிறார்.
அதிலும் உள்துறை அமைச்சரின் வருகை, சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டது தொடர்பான விவரங்களை தொடர்ந்து அனுப்பியதை அவரின் தொலைப்பேசியில் உள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மோதிராமின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக கண்காணித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தகுந்த ஆதாரங்களைச் சேகரித்த பின்பு அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.
இந்த வழக்கில் மோதிராமுடன் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் இந்நிலையில், தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரே ராணுவ ரகசியத்தை அண்டை நாட்டிற்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.