ட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடப்படுகின்றன

 

கடந்த சில நாடுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதால் பல இடங்களிலும் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மின் விநியோகத்திலும், குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால், விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், லாம்ஸ் ராக், டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

நேற்று ஊட்டியில் மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியன திறக்கப்பட்ட நிலையில் நேற்றும், இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்ததால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் நேற்றும் இன்றும் மூடப்படுகின்றன.

மாவட்டத்தில் பல பகுதிகளில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஊட்டியில் இருந்து மசனகுடி செல்லும் சாலையில் 30-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி பசவக்கல் கிராமத்தில் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் ஆகாச பாலம்-தவளமலை இடையே சுமார் 30 அடி உயரத்தில் இருந்து பாறைகள் மற்றும் மண் சரிந்து கொண்டிருப்பதால், எந்நேரமும் இச்சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால், இவ்வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.