மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது.

பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரி “இந்தியாவில் நகரமயமாக்கல் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக” விமர்சித்துள்ளார்.

மும்பையின் வி.வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பெடார் சாலை மற்றும் நேபியன் சீ சாலை ஆகியவற்றில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ள வீடியோக்களையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.

“இந்தியாவின் உயர்மட்ட கோடீஸ்வரர்கள், உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் தாயகமான நேபியன் சீ சாலை, ஒரு மழைக்கே மூச்சுத் திணறுகிறது” என்று அக்னிஹோத்ரி வெள்ளத்தில் மூழ்கிய தெருவின் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், “டெல்லி, பெங்களூரு மற்றும் பிற நகரங்களிலும் ஆண்டுதோறும் இவ்வாறே நிகழ்கின்றது. இந்தியாவின் பரிதாபகரமான நகரமயமாக்கல் ஒரு போலித்தனத்தால் மூடப்பட்ட ஒரு மோசடி. ஏழை சாதாரண குடிமக்கள் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்?” என்று விமர்சித்துள்ளார்.

மற்றொரு கிண்டலான பதிவில், அவர், “பெடர் சாலை. மும்பையின் மிகவும் ஆடம்பரமான முகவரிகளில் ஒன்று. உங்கள் கார் உங்கள் வீட்டு வரவேற்பு அறையைக் கடந்து மிதப்பதைப் பார்க்கும் பாக்கியத்திற்கு சதுர அடிக்கு ரூ. 1 லட்சம். உலகத் தரம் வாய்ந்த விலை நிர்ணயம். மூன்றாம் உலக வடிகால். நீர்நிலையை ரசிக்கும் வகையில் கூடிய மனைப் பிரிவு, கூடுதல் கட்டணம் இல்லை” என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் போன்று பதிவிட்டுள்ளார்.

மும்பை வெள்ள பாதிப்புகள் குறித்த விவேக் அக்னிஹோத்ரியின் விரக்தி பதிவுக்கு பதிலளித்துள்ள பலர், “சார் ‘வாட்டர் ஃபைல்ஸ்’ படம் எப்போது ?” என்றும்

இந்த வெள்ள பாதிப்புகள் ஒரு படம் எடுக்க தகுதியான கருத்தை கொண்டுள்ளது என்றும் மற்றொருவர் படத்திற்கு ‘தி டிரைனேஜ் ஃபைல்ஸ்’ என்ற தலைப்பையும் பரிந்துரைத்துள்ளார்.