சென்னை
வரும் 25 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு சக்தி என பெயரிடப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் இரண்டு வளி மண்டல காற்று சுழற்சிகள் உருவாகி மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் பெரும் மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தென்மேற்கு பருவமழையும் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுப்பெற்று 22ம் தேதியில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று 25 அல்லது 26ம் தேதியில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால் அதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது.