பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளது இந்த விசாரணையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மீது பாகிஸ்தான் ராணுவம் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் இந்திய ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதையடுத்து எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மே 8 மற்றும் மே 9 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது டிரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இருந்தபோதும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவின் தகவலை அடுத்து பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்தது.
இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக மே 8ம் தேதி இரவு பஞ்சாபின் பொற்கோயில் மீது ட்ரோன் மூலம் குண்டு வீச முயற்சி நடந்ததாகவும் இதை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மே 7 முதல் மே 9 வரை நடைபெற்ற இந்த இந்தியா – பாகிஸ்தான் போர் எல்லைக்கு அப்பால் இருந்து வந்த அழைப்பை ஏற்று மே 10ம் தேதி நிறுத்தப்பட்ட நிலையில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.