சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் வீட்டில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைபெற்றது. இந்த சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
தமிழகத்தில் அரசு நடத்தி வரும், ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் க டந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம், ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது கிடைக்கப்பேற்ற ஆவணங்கள் மூலம், ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் ‘டாஸ்மாக்’ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, விசாரணைக்கு ஆஜராகும்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் மேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அரசு அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 16ந்தேதி அன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்பட பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி,. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று முன்தினம் (மே 16) காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டின் அருகே சாலையோரமாக சிதறி கிடந்த ‘டாஸ்மாக்’ மதுபான ஒப்பந்த நகல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சோதனைக்கு மத்தியில், விசாகனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதே வேளையில் அவரது வீட்டில் விடிய விடிய அதிகாரிகள் சோதனை தொடர்ந்தது.
நேற்று (மே 17) 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. விசாகனை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சூளைமேடு பகுதியில் வசிக்கும் ‘டாஸ்மாக்’ மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன், பெசன்ட் நகர் கற்பகம் கார்டனில் வசிக்கும் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர்களான தியாகராயநகரை சேர்ந்த கேசவன், ராயப்பேட்டையை சேர்ந்த தேவகுமார், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாபு, குமரன் காலனியில் வசிக்கும் இந்திரஜித் ஆகியோரது வீடுகளும் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியது. இந்த இடங்களிலும் 2-வது நாளாக சோதனை நீடித்தது.
இதில் மின்சார ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார், தொழிலதிபர் தேவகுமார் ஆகிய 2 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து குறுகிய காலத்தில் பட அதிபரான ஆகாஷ் பாஸ்கரனும் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையில் சிக்கினார். தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.
முக்கிய அரசியல் புள்ளி (உதயநிதியின் நண்பர்) ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ரத்தீஸ் பெயரும் இந்த சோதனை பட்டியலில் இடம் பெற்றது. அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்த சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் அவருடைய வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவலை முன்கூட்டியே அறிந்து ரத்தீஸ் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருடைய வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து பூட்டி, சாவியை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….
டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!