பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்றனர்.
இவர்களை தேடும் பணி நடைபெற்று வரும் அதேவேளையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் நேற்றிரவு குண்டு வீசி அழித்தது.
லஷ்கரி தொய்பா, ஜெய்ஷி முகமது உள்ளிட்ட அமைப்புகளின் தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில் தங்கள் நாட்டு எல்லையில் உள்ள பகுதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தின் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த எச்சரிக்கையை அடுத்து இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதுடன் காஷ்மீரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் ஏற்படும் அபாயம் உள்ளது.