சென்னை: ‘ ஜாதி சான்றிதழ் வழங்கும் முன்பு முழுமையான விசாரணை நடத்தி, அதன்பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் போலி சான்றிதழ் அதிகமாக நடமாடுவதாகவும், சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகத் தெரிகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

இந்த நிலையில், போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரின் ஜாதி சான்றிதழ் குறித்த விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் சுப்ரமணியம், கே . ராஜசேகர் அமர்வு விசாரித்து வருகிறது. மே 2ந்தேதி அன்றைய விசாரணையின்போது, ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பழங்குடியினரின் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு வகுத்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும் என்று கூறியதுடன், இக்குழு விரைந்து விசாரிக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ஆறு வாரத்திற்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.