சென்னை: மே 1ம் தேதி இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன.
2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) இன்றுமுதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் உயர்வு மற்றும் ரெப்போ வட்டி குறைவால், கடனுக்கான வட்டி குறைவு உள்பட பல்வேறு வங்கி சேவைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன.

பொதுவாக ஜூலை 31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு முதல் புதிய வருமான வரி அமல்படுத்தப்படும் என மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்த நிலையில், அதற்கான ஐடிஆர் படிவங்கள் இன்றுவரை வெளியாகவில்லை. அதனால், வருமான வரித்தாக்கல் நடவடிக்கை மேலும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், செல்வமகள் சேமிப்பு திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது உள்ள வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
மேலும், ஏடிஎம் மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி புதிய கட்டணம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. மாதாந்திர இலவச வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வரை வசூலிக்கலாம், இது நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும்.
இதுவரை 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகள் ஏற்கனவே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது .
வட்டி விகிதம் மாற்றம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்துபல முன்னணி பொதுத்துறை வங்கிகள், அவற்றின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை (RBLR) அதற்கேற்ப மாற்றி அமைத்துள்ளன. இந்த வட்டி விகித மாற்றங்கள் ஏப்ரலில் செய்யப்பட்டாலும் மே மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.
இந்த மாற்றம் மூலம் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டு உள்ளன.