டெல்லி:  மத்தியஅரசின்  சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால்,  அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார்.

மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்தியஅரசின் செயலாகும். ஆனால், சில மாநிலங்கள் கணக்கெடுப்புகளை தன்னிச்சையாக  நடத்தியுள்ளன,  சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்துள்ளன, மற்ற சில அரசியல் கோணத்தில் இருந்து வெளிப்படையான முறையில் இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. இத்தகைய கணக்கெடுப்புகள் மாநிலத்தில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன,” என்று  தெரிவித்தார்.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான  ராகுல் காந்தி சாதி கணக்கெடுப்பை ‘வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.  மேலும்,  சாதி கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை  இப்போது மத்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். இது   காங்கிரஸ்  கட்சியின் நீண்டகால கோரிக்கைக்கு  கிடைத்த முதல்வெற்றி என்று கூறினார்.

சாதிய கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை என தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், சாதி கணக்கெடுப்பு நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும் என்றும், இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை நீக்க வலியுறுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், பிரதமர் மோடி குறிப்பிட்டது போல் நான்கு பரந்த சாதி வகைகளை மட்டும் அடையாளம் காணும் யோசனையை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றும், ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“நாங்கள் நாடாளுமன்றத்தில் சாதி கணக்கெடுப்பை மேற்கொள்வோம் என்றும் 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவோம் என்றும் கூறியிருந்தோம்,” என்று காந்தி கூறினார், மேலும், “நாங்கள் அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்கிறோம், மேலும் தெலுங்கானாவைப் போன்ற மாதிரிகளைப் பயன்படுத்தி சாதி கணக்கெடுப்பை வடிவமைக்க உதவ தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் ஒரு காலக்கெடுவை வழங்க வேண்டும்.”

இந்தியா சாதி கணக்கெடுப்பை நடத்துவதைத் தாண்டி சமூக நீதியை நோக்கி மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.