பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது.

எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் கூடுதல் உத்திகளை வகுப்பதற்காக இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் அனைத்து ஆயுதப்படைகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கான மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) கூட்டத்தை பிரதமர் மோடி நாளை கூட்டியுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.