டெல்லி: முல்லைப்பெரியாறு பிரச்சினையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முரண்டு பிடித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும் என்று கூறியுள்ளது.
தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் கேரள அரசின் அச்சம் காரணமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், அணை பாதுகாப்பு குறித்து கண்காணிக்க மத்திய நீர்வள அதிகாரி தலைமையில் மூவர் குழுவும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கேரள மாநில அரசோ, அணை பாதுகாப்பு இல்லை என கூறி அவ்வப்போது பிரச்சினைகளை எழுப்பி வருகிறது. அணையை முறையாக பராமரிக்கவும் மறுத்து வருகிறது. இந்த விஷயத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் கூட்டணியில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேசி இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், தமிழ்நாடு முதல்வர் அதை ஏற்க மறுத்து வருகிறார். இதனால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவது, பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டுவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவுக்கு எதிராக, கேரள அரசு இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, , ” பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிய தமிழ்நாடு அரசின் விண்ணப்பம் காலாவதியாகிவிட்டது. மத்திய வனத்துறையின் பரிவேஷ் இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். 142 அடி வரை நீரை தேக்கி வைக்கும் கோரிக்கை ஏற்கனவே நிறைவேறியுள்ளதால், மீண்டும் அதை வலியுறுத்த முடியாது.முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை. பராமரிப்பு பணிகள், பனரமைப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் மேற்கொண்டாலும் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வல்லக்கடவு- முல்லைப் பெரியாறு சாலையை செப்பனிடுவதற்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே உள்ள சாலையே அணை பராமரிப்பு பணிக்கான உபகரணங்களை எடுத்து செல்ல போதுமானது. தற்போதைய முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்துக்கும் தீர்வாக அமையும்.
முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். முல்லைப்பெரியாறு மேற்பார்வைக்குழுவை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. மேற்பார்வை குழுவை கலைத்து, அறிவிப்பாணை வெளியிட்டது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு முரணானது,”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.