டெல்லி: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை 2003ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்ட்ட 13 பேரின் ஆயுள் தண்டனையை 22 ஆண்டு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு இன்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2003-ல் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில் காதில் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட கண்ணகி – முருகேசன்ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் 12 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன்படி, கண்ணகியின் அண்ணன், தந்தை, காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘கண்ணகி-முருகேசன்’ கௌரவக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) தண்டனையை உறுதி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து எட்டு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது, இது அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
சாதி மறுப்பு தம்பதிகளான எஸ். முருகேசன் மற்றும் டி. கண்ணகி ஆகியோரை கொடூரமாக கொலை செய்தது தொடர்பான வழக்கு இது. முருகேசன் வேதியியல் பொறியியலில் பட்டதாரி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கண்ணகி ஒரு வணிகப் பட்டதாரி மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஜோடி மே 5, 2003 அன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களின் குடும்பத்தினர் கவுரவ கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.