மும்பையில் நீர்வழி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் நோக்கம் இருப்பதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கேரளாவின் கொச்சி நீர்வழி மெட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா துறைமுக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் விரிவான திட்டமிடல் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மத்திய அரசுடன் 50:50 கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

மும்பை ஏழு தீவுகளால் ஆனது. ஆனால் நீர்வழிகள் ஒருபோதும் அவற்றின் முழு திறனுக்கும் பயன்படுத்தப்படவில்லை. நீர் மெட்ரோ சாலைகள் மற்றும் புறநகர் ரயில்வே மீதான சுமையைக் குறைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நீர் மெட்ரோ திட்டம் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும். இது மும்பை சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்று ரானே விளக்கினார்.

உள்நாட்டு கப்பல் முனையம் (DCT) – கேட் வே ஆப் இந்தியா, மிரா பயந்தர் – வசை – போரிவாலி – நரிமன் பாயிண்ட் – மாண்ட்வ, பெலாப்பூர் – கேட் வே ஆப் இந்தியா – மாண்ட்வ – கோராய் – நரிமன் பாயிண்ட் ஆகியவை இதற்கான சாத்தியமான வழித்தடங்கள் என்று ரானே தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோ டிசம்பர் 2023 இல் கொச்சியில் தொடங்கப்பட்டது. 10 சிறிய தீவுகளைக் கொண்ட கொச்சியில் 8 எலக்ட்ரிக் போட்களுடன் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.