பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார்.

26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தேடுதல் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது.

பந்திபோரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காஷ்மீர் வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்தித்த ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்தார்.