சென்னை: தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு (கோபாலபுரம் குடும்பத்திற்கு) பலன் கிடைக்கும் என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதன்முலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளித் துறைக்கு திறமை வாய்ந்த, தகுதியான நபர்களை உருவாக்குவது இந்த விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய அம்சம் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கை தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பதே பொருத்தம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். கோபாலபுரம் குடும்பத்தின் தொழில் கொள்கை இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ்நாடு போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, 2025 ஆம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்!” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் எலன் மஸ்க் எப்படி ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்கி, நாசாவுக்கே டஃப் கொடுத்து வருகிறாரோ அதுபோல, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வானம் என்கிற தனியார் விண்வெளி மையத்தை தொடங்கி உள்ளனர். அதாவது, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தம்பி ஹரிஹரன் மற்றும் சமீர்பாரத்ராம் ஆகியோர் சேர்ந்து தொடங்கி உள்ளனர். சபரீசன் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஆலோசகராக வும் உள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக எடுத்துச் செல்லும் இந்தியாவின் முதல் நிறுவனமாக வானம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தை ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் திறந்து வைத்துள்ளார்.
10ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!